பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் ஐந்து பேர் கொண்ட கும்பலால் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 11-ஆம் தேதி அன்று அந்தப் பெண் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது, மறைந்திருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாகப் பிடித்து ஒதுக்குப்புறமான இடத்திற்கு இழுத்துச் சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அப்போது அவர் சத்தம் போட முயன்றதால், ஆத்திரமடைந்த அந்தக் கொடூர கும்பல் பிளேடால் அவரது மார்பு மற்றும் தொடைப் பகுதிகளில் கீறி கடுமையான காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாதிப்புக்குள்ளான பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பின் ஜூன் 12 அன்று வீடு திரும்பினார். எனினும், அவரது பிறப்புறுப்புப் பகுதியில் தொடர்ந்து தாங்க முடியாத கடுமையான வலி இருந்ததால், ஜூன் 17 அன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்; அந்தப் பெண்ணின் உடலின் உட்பகுதியில் அந்தக் கும்பல் சில பொருட்களைச் செருகி வதைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டு அவரது உடலுக்குள் இருந்த ஒரு துப்பாக்கித் தோட்டா, ஒரு கல் மற்றும் ஒரு மரக்கட்டையை வெற்றிகரமாக வெளியே எடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பெகுசராய் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் பாண்டே தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி, தப்பியோடிய 5 குற்றவாளிகளையும் வலைவீசித் தேடி வருகிறது. இதற்கிடையே, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இதே கும்பல் தன் வீட்டிற்குள் புகுந்து திருடியதோடு, தன்னைத் தாக்க முயன்றதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அப்போதே காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவலர்கள் மீது தகுந்த விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தற்போது உறுதியளித்துள்ளனர்.
