திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள மாரம்பேடு பகுதியில் ஜூன் 6-ஆம் தேதி இரவு, சாலையோரப் பள்ளத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். முதற்கட்டமாக இது விபத்தாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், உயிரிழந்தவர் வியாசர்பாடியைச் சேர்ந்த 29 வயதுடைய மணிகண்டன் என்பது தெரியவந்தது, அவர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து, மணிகண்டனின் மொபைல் போன் பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவர் கடைசியாக வியாசர்பாடியில் உள்ள தனது நண்பர்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மணிகண்டனின் நண்பரான 44 வயதுடைய செந்தில் என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், செங்குன்றம் அடுத்த சிறுங்காவூர் பகுதியில் செந்தில் கட்டி வரும் புதிய வீட்டில் வைத்து இந்த அசம்பாவிதம் நடந்தது தெரியவந்தது.
வெள்ளிக்கிழமை இரவு நண்பர்கள் மூவரும் அங்கு அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், உருட்டுக்கட்டையால் தாக்கியதால் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். கொலையை மறைப்பதற்காக அவரது உடலைச் சாலையில் வீசிவிட்டு விபத்து போல நாடகமாடியதை செந்தில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, சரித்திர பதிவேடு குற்றவாளியான செந்தில்குமாரை சோழவரம் போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய விக்கி என்ற மற்றொரு நபரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
