இந்திய டெலிகாம் சந்தையில் தனது ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில், ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்காக ‘ஃப்ரீடம் பிளான்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பைபர் மற்றும் ஜியோ ஏர் பைபர் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், பயனர்கள் 100Mbps வேகத்தில் அன்லிமிடெட் இன்டர்நெட்டைப் பெற முடியும். ஆன்லைனில் பணிபுரிபவர்கள், ஒர்க் ப்ரம் ஹோம் செய்வோர் மற்றும் அதிகளவில் டேட்டா பயன்படுத்துவோருக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.
இன்டர்நெட் சேவையோடு சேர்த்து, பயனர்களின் பொழுதுபோக்கைக் கொண்டாடும் வகையில் பல்வேறு ஓடிடி ஆப்களுக்கான இலவசச் சந்தாவும் இதில் வழங்கப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டார், சோனி லைவ் , ஜீ5, சன் நெஸ்ட்,பான் கோடு மற்றும் ஜியோ பிரெய்மியாம் உள்ளிட்ட பல முன்னணி தளங்களின் அணுகல் இதில் அடங்கும். மேலும், ஜியோ செட்-டாப் பாக்ஸ் மூலமாக 800-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் லைவ் டிவி சேனல்களையும் வாடிக்கையாளர்கள் தடையின்றி ரசிக்கலாம்.
இந்தத் திட்டத்தின் அடிப்படை விலை ரூ.10,000 18% ஜிஎஸ்டி சேர்த்து தோராயமாக ரூ.11,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 12 மாத கட்டணத்தில் 15 மாத வேலிடிட்டியை வழங்குவதுடன், 3 மாதங்கள் கூடுதல் இலவச கால அவகாசத்தையும் தருகிறது. ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்களின் குறைந்த வேகத் திட்டங்களுக்குப் போட்டியாக வந்துள்ள இந்த ஜியோவின் புதிய பிராட்பேண்ட் திட்டம், டெலிகாம் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
