டச்சு மொழியா… அப்படின்னா என்ன?… அறுவை சிகிச்சைக்குப் பின்… தாய்மொழியை மறந்து திடீரென… ஆங்கிலம் பேசிய இளைஞர்… மருத்துவ உலகில் விசித்திர சம்பவம்…!

By Swetha on ஆடி 25, 2026

Spread the love

அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கம் தெளிந்த 17 வயது டச்சு சிறுவன் ஒருவன், தனது தாய்மொழியான டச்சை முற்றிலுமாக மறந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசிய விசித்திரமான சம்பவம் நெதர்லாந்தில் நடந்துள்ளது. கால்பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அந்த சிறுவன், விழித்தெழுந்ததும் தான் அமெரிக்காவில் இருப்பதாக நம்பியதோடு, தன் பெற்றோரையும் அடையாளம் தெரியாமல் மறந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தினான்.

பள்ளியில் ஓரளவுக்கு மட்டுமே ஆங்கிலம் கற்றிருந்த அச்சிறுவன், திடீரென அதைத் தாய்மொழி போல சரளமாகப் பேசத் தொடங்கியதன் பின்னணியில் “ஃபாரின் லாங்குவேஜ் சின்ட்ரோம்” என்ற மிக அரிய மருத்துவக் குறைபாடு இருப்பது தெரியவந்தது. மருத்துவ வரலாற்றிலேயே இதுவரை வெறும் 9 பேருக்கு மட்டுமே கண்டறியப்பட்டுள்ள இந்த அரிதான பாதிப்பு, பொதுவாக அறுவை சிகிச்சையின் போது கொடுக்கப்படும் அனஸ்தீஸியா காரணமாக மூளையில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களால் உருவாகிறது.

   

சுமார் 18 மணி நேரம் வரை தனது தாய்மொழி டச்சை சிறிதும் புரிந்துகொள்ள முடியாமல் தவித்த அச்சிறுவன், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கினான். அறுவை சிகிச்சை முடிந்து 3 நாட்களுக்குள் அவன் முழுமையாகக் குணமடைந்து, மீண்டும் தனது தாய்மொழியிலேயே பேசத் தொடங்கியதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். குடும்பப் பின்னணியோ அல்லது முந்தைய உடல்நலச் சிக்கல்களோ எதுவுமின்றி நடந்த இந்தத் தற்காலிக விசித்திர நிகழ்வு மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.