திருச்சியில் ஆங்கிலப் பாடம் புரியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் லலிதா, தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வந்தார். பள்ளிப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்த இவர், பெற்றோரின் விருப்பத்திற்காகக் கல்லூரியில் ஆங்கிலப் பாடப் பிரிவைத் தேர்வு செய்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாகக் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தன. ஒரு வாரம் வகுப்புகள் நடந்த நிலையில், ஆங்கில மொழியில் நடத்தப்படும் பாடங்களைப் புரிந்து கொள்வதில் தனக்குச் சிரமம் இருப்பதாக லலிதா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதற்குப் பெற்றோரும், சில வாரங்களில் பழகி சரியாகிவிடும் என்று கூறி அவருக்கு நம்பிக்கையூட்டியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக லலிதா உடல்நிலையைக் காரணம் காட்டி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் அவரது சடலத்தைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
