தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது முதல் கையெழுத்தாக ‘200 யூனிட் இலவச மின்சாரம்’ வழங்கும் திட்டத்தை அறிவித்த நிலையில், அதுகுறித்த கூடுதல் விளக்கங்களுடன் கூடிய அரசாணையைத் தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 2.30 கோடிக்கும் மேற்பட்ட வீட்டு மின் நுகர்வோரில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எடுக்கப்படும் கணக்கீட்டின்படி 500 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, மின்சாரத் துறைத் தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வர் விஜய் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான ஆலோசனை நடத்தினார். 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரையில், அவர்களுக்குப் பழைய நடைமுறைப்படியே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் அரசுக்கு கூடுதலாக சுமார் 1,730 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணை முழுக்க முழுக்க வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் விஜய் எடுத்த இந்த அதிரடி முடிவு, நடுத்தர வர்க்க மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தமிழக அரசியல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அடுத்தடுத்த முக்கியத் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒன்இந்தியா தமிழுடன் இணைந்திருங்கள்.
