தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு மாற்று சக்தியாக விஜய் அரியணையில் ஏறியிருப்பது இந்திய அரசியலையே உற்றுநோக்க வைத்துள்ளது. ஆளுநர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு விழா, தமிழக அரசியலில் ஒரு பெரும் அதிகார மாற்றத்தைக் குறிக்கிறது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற விஜய், தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார்.
இந்த அரசியல் பயணம் இன்று நேற்றல்ல, சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பே முளைவிடத் தொடங்கியது. 2009-ம் ஆண்டு புதுச்சேரியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த விஜய், தனது அரசியல் ஆசையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். அந்தச் சமயத்தில் டெல்லி சென்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸில் இணைந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், “ராகுலுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமானது மட்டுமே; இப்போதைக்கு கவனம் நடிப்பில் தான்” என்று கூறி அப்போது நிலவிய அரசியல் வதந்திகளுக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்தார்.
அரசியலில் அதிகாரப்பூர்வமாக நுழைய தாமதமானாலும், தனது திரைப்படங்கள் வாயிலாகத் தொடர்ச்சியாக அரசியல் விதைகளை விஜய் தூவி வந்தார். ‘தலைவா’, ‘மெர்சல்’, ‘சர்கார்’ போன்ற படங்கள் மூலம் சமூக அவலங்களையும் அரசியல் மாற்றத்தின் தேவையையும் அழுத்தமாகப் பதிவு செய்தார். இறுதியாக, 2024 பிப்ரவரி 2-ம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி, “இனி சினிமா இல்லை, மக்கள் பணிதான்” என அறிவித்தார். 2026 சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த அவர், இன்று மக்களின் முதல்வராகப் பொறுப்பேற்றுத் தனது அரசியல் லட்சியத்தை எட்டியுள்ளார்.
விஜய்யின் இந்த அரசியல் வருகையால் அவரது திரைப்பயணம் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தோடு நிறைவு பெறுகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் சென்சார் சிக்கல்களால் தள்ளிப்போனாலும், ஒரு நடிகராக விஜய்யின் கடைசித் திரைப் பதிவாக இது அமையவுள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை அடையச் சிறு இடைவெளி இருந்தபோதும், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு அவர் ஒரு நிலையான ஆட்சியைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையில் நாயகனாக வலம் வந்த விஜய், இனி நிஜ வாழ்க்கையில் மக்களின் நாயகனாக எப்படிச் செயல்படப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
