ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள்… எல்லா வெர்ஷனிலுமே சூப்பர்ஹிட் பாடல்கள்- இந்த படத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

By vinoth on ஆடி 6, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு இணையாக நல்ல கதையம்சம் உள்ள படங்களும் வெளியாகி வெற்றி பெறுகின்றன. முன்னணி மாஸ் நடிகர்களே நல்ல கதையம்சம் உள்ள எதார்த்தமான படங்களில் நடிக்க முன்வருகின்றனர்.

மலையாள சினிமாவின் பட்ஜெட் குறைவு என்றாலும் அங்கு ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படத்தை எடுத்து அதை சூப்பர் ஹிட்டாக்கி, மற்ற மொழிகளில் ரீமேக் உரிமையை விற்பதன் மூலமே நல்ல லாபத்தைப் பெற்றுவிடுகிறார்கள். அதற்கு மணிச்சித்திரதாழ் முதல் த்ருஷ்யம் வரை நல்ல உதாரணங்களாக அமைந்தன.

   

த்ருஷ்யம் திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டு, இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போது ஹாலிவுட் வரை சென்றுள்ளது. அப்படி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்தான் அனியதிப்ரவு எனும் மலையாள திரைப்படம். இந்த படம் தமிழில் பெரிய வெற்றி பெற்ற காதலுக்கு மரியாதை படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் ஆகும்.

   

அனியதிப்ரவு திரைப்படத்துக்கு மலையாள இசையமைப்பாளரான அசேப்பச்சான் இசையமைத்திருந்தார். படத்தைப் போலவே பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. அந்த படம் தமிழில் ரீமேக் ஆன போது அதற்கு இளையராஜா இசையமைத்தார். காதலுக்கு மரியாதை படத்தின் பாடல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின.

 

தெலுங்கில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்ட போது அதற்கு சிற்பி இசையமைத்தார். இதே படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இந்தியில் ரீமேக் செய்த போது அதற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். அந்த பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. அந்த படத்துக்காக அவர் போட்ட பாடல்கள்தான் தமிழில் ஜோடி படத்தில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இப்படி ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து அனைத்துப் பாடல்களும் ஹிட்டானது இந்திய சினிமாவில் அதிகம் நடக்காத ஒன்று என்றே சொல்லலாம்.