ஒடிஷாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கன்ஹு சரண் லென்கா (86) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (பிப். 13, 2026) காலமானார். ஒடிசா அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த தலைவரான இவர், 1971 முதல் 2000 வரை நான்கு முறை சௌத்வார் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசியலிலும் முத்திரை பதித்த இவர், 1988 முதல் 1994 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய ரயில்வே மற்றும் வேளாண் துறை இணை அமைச்சராக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாகத் திகழ்ந்த இவர், ஒடிசாவில் கட்சியின் வளர்ச்சிக்காக சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பெரும் பங்காற்றியுள்ளார்.
