வாட்ஸ்அப் காதலில் மயங்கி நாட்டை காட்டிக் கொடுத்த முன்னாள் ராணுவ கேப்டன்…. வேலூரில் அரங்கேறிய ஷாக் சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 26, 2026

Spread the love

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவத்தில் இணையும் போதே வீரர்கள் ரகசியங்களை காக்க கடுமையான உறுதிமொழி ஏற்கின்றனர். இந்த விதிமுறைகளை மீறி, முன்னாள் ராணுவ கேப்டன் ஒருவர் பெண் ஒருவரிடம் நாட்டின் ரகசியங்களை பகிர்ந்து கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்வெல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (52). ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ கேப்டனான இவருக்கு, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஹனீஷ்சர்மா என்பவருடன் சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் பணிபுரிவதாகக் கூறி அறிமுகமான அந்தப் பெண்ணுடன் பாபுவுக்கு ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியுள்ளது.

   

கடந்த ஒரு வருடமாகத் தொடர்ந்து தொலைபேசி மற்றும் வீடியோ காலில் பேசி வந்த அந்தப் பெண், ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களை பாபுவிடம் கேட்டுள்ளார். ஆரம்பத்தில் பொதுவான தகவல்களைப் பகிர்ந்த பாபு, பெண்ணின் மீதான ஈர்ப்பு காரணமாக தனக்குத் தெரியாத பல முக்கிய ராணுவ ரகசியங்களையும், சக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு கேட்டுப் பெற்று அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வந்துள்ளார்.

   

பாபுவின் இந்தச் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்த போலீசார், வேலூரிலுள்ள அவரது வீட்டிலேயே அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதுடன், நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்காக என்.ஐ.ஏ. உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு அமைப்புகளும் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன.