சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ பெரியபுள்ளான் (எ) செல்வத்தின் மகன் உலகாதிபதி (21), இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வழக்கம்போல பைக்கில் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த அவர், கிண்டி சர்தார் படேல் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த ஜே.சி.பி வாகனம் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த உலகாதிபதி மீது வாகனம் ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர், உலகாதிபதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவடைந்ததும் அவரது உடல் சொந்த ஊரான மேலூருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
மேலூர் தொகுதியில் 2016 முதல் 2026 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்த பெரியபுள்ளானின் மகன் விபத்தில் பலியான சம்பவம் மேலூர் பகுதி மக்களிடையேயும் அ.தி.மு.க தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டப் பல அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
