கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக் கூறி மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். சராசரியாக மாதத்திற்கு ஒரு வினாத்தாள் கசியும் அளவுக்கு நாட்டின் கல்வித் துறை சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தேர்வுகளுக்காகக் கடினமாக உழைத்துப் படிக்கும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7.5 கோடி மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் சொத்தாக விளங்கும் கல்வி அமைப்பையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் அழித்து வரும் நிலையில், தவறு செய்த ஒருவருக்குக் கூட இதுவரை தண்டனை கிடைக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். நீட் மற்றும் நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான உயர்கல்வித் தேர்வுகளில் முறைகேடுகள் தொடர்ந்து அரங்கேறி வரும் சூழலில், இந்தச் சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
