ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் மீது அமெரிக்கா நேரடியாகக் குண்டுவீசும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், இந்த நடவடிக்கைகளைத் தான் இப்போதைக்கு நிறுத்தப்போவதில்லை என்றும், போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டுவர ஈரானுக்கு 20 ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், போரினால் ஏற்பட்டுள்ள பெரும் இழப்புகள் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஈரான் தரப்பு பேச்சுவார்த்தைக்கு முனைப்பு காட்டுவதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் முறையாகத் தயாராகும் வரை சந்திப்பில் விருப்பமில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் போன்ற சர்வதேச மத்தியஸ்தர்கள் மூலம் அமைதி பேச்சுவார்த்தைக்கான தூதரகக் தொடர்புகள் நீடித்து வரும் வேளையில், போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரையும் அமைதி காக்குமாறு அமைதி தூதுவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
