காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரத்தைச் சேர்ந்த 28 வயதான சோமசுந்தரம் என்ற ஊர்க்காவல் படை வீரர், காதலித்து திருமணம் செய்துகொண்ட தன் 5 மாத கர்ப்பிணி மனைவியான சோனியாவை (28) அடித்துத் தொண்டையை நெரித்துக் கொன்ற வழக்கில் சாலவாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி எட்டு மாதங்களே ஆகும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்பதியிடையே கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை ஆனம்பாக்கத்தில் உள்ள சோனியாவின் தாய் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோமசுந்தரம், கர்ப்பிணியான சோனியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாலவாக்கம் காவல்துறையினர், சோனியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த சோமசுந்தரத்தை அதே பகுதியில் வைத்துப் போலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
