“கடலுக்கு போன தந்தை பிணமாக வந்த சோகம்”… உடலைப் பார்த்த உறவினர்கள் அலறல்! அப்படி என்ன இருந்தது?…. கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பு….!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மீனவர் கதீர், கடந்த 13 நாட்களுக்கு முன்பு கொச்சி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவிபுத்தந்துறையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான விசைப்படகில் கதிரோடு சேர்த்து மொத்தம் 10 மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். கடந்த 22-ஆம் தேதி இரவு, கரையில் இருந்து சுமார் 80 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கதீருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி சக மீனவர்கள் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கதீரின் உடல் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலைப் பார்த்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உயிரிழந்த கதிரின் தலை, முகம் மற்றும் இடுப்புப் பகுதிகளில் பலத்த ரத்தக் காயங்கள் இருந்ததைக் கண்டு, இது மாரடைப்பினால் ஏற்பட்ட மரணம் அல்ல என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது. சாதாரண மரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், உடலில் இத்தனை காயங்கள் இருந்தது உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

   

உடனடியாகச் செயல்பட்ட உறவினர்கள், கதீரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் கடலோர காவல்குழும காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று புகார் அளித்தனர். அந்தப் புகாரில், கதிரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், படகில் இருந்த மற்றவர்களிடம் உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். போலீசாரிடம் நீதி கேட்டு மீனவ மக்கள் காவல் நிலையத்தில் திரண்டதால் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது.

   

புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், உறவினர்களைச் சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். தற்போது கதிரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குளச்சல் கடலோர காவல்குழும போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.