கல்லூரி மாணவிக்கு இப்படியா ஆகணும்?…. மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி… மொத்த ஊரையே கலங்கவைத்த சம்பவம்…!

By Nanthini on சித்திரை 25, 2026

Spread the love

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி பத்மாவதி, அன்னூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஹரிணி (19), மேட்டுப்பாளையம் அரசு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தந்தையை இழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்த ஹரிணிக்கு, சிறு வயது முதலே சுவாசம் தொடர்பான கோளாறுகள் இருந்து வந்துள்ளன. இதற்காக அவர் அவ்வப்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி ஹரிணிக்கு மூக்கில் வலி அதிகமானதால், அன்னூரில் உள்ள ஒரு மருத்துவரை அணுகியுள்ளனர். அந்த மருத்துவர் பரிந்துரைத்தபடி, குறைந்த செலவில் சிகிச்சை பெறலாம் என எண்ணி அன்னூர் அருகே காட்டம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஹரிணி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, எதிர்பாராதவிதமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்ட போதிலும், பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

   

இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, மாணவியின் தாய் பத்மாவதி அளித்த புகாரின் பேரில் அன்னூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில், அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் மரணத்திற்கான காரணம் குறித்து கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் அவருடன் பயிலும் கல்லூரி மாணவிகள் நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கினர்.

   

காட்டம்பட்டி பிரிவு பகுதியில் அன்னூர்-கோவை சாலையில் திரண்ட போராட்டக்காரர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த அன்னூர் காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவியின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது. வளர்ப்பு மகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் தூய்மைப் பணியாளரின் துயரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.