சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள சூழலில், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்க, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்ற அதீத நம்பிக்கையில் இருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் பதிவான வாக்கு சதவிகிதம் அதிகரித்திருப்பது அதிமுக தரப்பினரை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நம்பிக்கைக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பிரிக்கும் வாக்குகள் தான். தவெக அதிக அளவிலான வாக்குகளைப் பிரிக்கும் பட்சத்தில், அது ஆளுங்கட்சியின் வாக்கு வங்கியைப் பாதித்து அதிமுகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் தவெகவுக்குப் பெரிய அளவில் கட்டமைப்பு இல்லை என்றாலும், அங்கு வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது ஆட்சிக்கு எதிரான மனநிலையே எனக் கணக்குப் போடுகின்றனர்.
சேலத்தில் தனது குடும்பத்தினருடனும், உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடனும் நேரத்தைச் செலவிட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகள் தங்களுக்குப் பெரும் வெற்றியைத் தரும் என்பதில் உறுதியாக இருக்கிறார். சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் தவெக பிரிக்கும் வாக்குகள் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என்று அவர் நம்புகிறார். ஒருகட்டத்தில், சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசும்போது, அடுத்து அமையப்போகும் ஆட்சியில் யாருக்கு என்ன இலாகா வழங்கலாம் என்பது வரை அவர் ஆலோசிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், முதல்வர் ஸ்டாலின் வெற்றி நிச்சயம் என்ற தெம்புடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அதிமுகவின் இந்த “குஷி மோட்” அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி வலுவாக இருக்கும் இடங்களில் தவெக இரண்டாம் இடத்தைப் பிடித்தால் கூட, அது திமுகவின் வாக்கு வெற்றியைத்தான் பாதிக்கும் என்பதே அதிமுகவினரின் கணிப்பாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் பலிக்கிறதா என்பது தெரிந்துவிடும்.
