சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் வசதியையும் அமைதியையும் உறுதி செய்யும் வகையில், சத்தமாகப் பேசுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய விதிமுறையை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இதன்படி, ரயிலுக்குள் மொபைல் போனில் உரத்த குரலில் பேசுவது அல்லது ஸ்பீக்கர் போட்டுப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இத்தகைய செயல்கள் அமைவதால், ரயிலுக்குள் அமைதியான சூழலைப் பராமரிக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதியின் கீழ், ஹெட்போன் அணியாமல் மொபைலில் சத்தமாகப் பாட்டு கேட்பது அல்லது வீடியோ பார்ப்பது ஆகியவையும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ரயில்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும், விதிகளை மீறுபவர்கள் கண்டறியப்பட்டால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணங்கள் இனிமையானதாகவும், தொந்தரவற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்த புதிய கட்டுப்பாட்டின் நோக்கம் என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
