சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்து வைப்பதில் தான் உறுதியாக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல் போக்கு காரணமாக இந்தப் பாதையில் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ‘புதிய ஏற்பாடுகளின்’ மூலம் இதனைச் செயல்பாட்டிற்கு கொண்டுவர ஈரான் சிக்னல் கொடுத்துள்ளது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தப் பாதை வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் வர்த்தக கப்பல்கள் இந்தப் பாதையைத் தடையின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்களுக்கு எதிராகச் செயல்படும் நாடுகள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகள் தொடரும் என ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சர்வதேச கடல்சார் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் பிராந்தியத்தில் அமைதி நிலவ அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
