லண்டனில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், 65 வயதான முன்னாள் வேதியியல் ஆசிரியை சாலி-ஆன் போவன் குற்றவாளி என ஹாரோ கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடக்கு லண்டனின் ஃபிஞ்ச்லே பகுதியில் உள்ள ஆண்கள் பள்ளியில் பணியாற்றியபோது, 14 முதல் 15 வயதுடைய இரண்டு மாணவர்களிடம் அவர் இந்த குற்றங்களைச் செய்துள்ளார். ஆகஸ்ட் 27 அன்று நிறைவடைந்த விசாரணையில், நடுவர் குழு தீவிர ஆலோசனைக்குப் பிறகு அவர் மீதான ஏழு பாலியல் குற்றச்சாட்டுகளையும் உறுதி செய்துள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளித்த முதல் நபர், ஆசிரியை போவனுடன் பல மாதங்களாக ரகசிய பாலியல் உறவில் இருந்ததாகவும், அவரைத் தனது காதலியாகவே கருதியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியை கட்டாயப்படுத்தியதால், பல ஆண்டுகளாக மனதிற்குள்ளேயே புதைத்து வைத்திருந்த இந்தச் சம்பவம் தனது கல்வியையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் கடுமையாகப் பாதித்ததாக அவர் வேதனை தெரிவித்தார். மற்றொரு முன்னாள் மாணவர், வகுப்பறையில் ஆசிரியை பாலியல் தகவல்கள் குறித்து விவாதித்ததாகவும், வெளியே தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் நீதிமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.
தங்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆசிரியை போவன் திட்டவட்டமாக மறுத்தார். தான் மாணவர்களுடன் நட்புரீதியாக மட்டுமே பழகியதாகவும், முதல் மாணவருடன் எந்தத் தவறான உறவும் இல்லை என்றும், இரண்டாவது நபரைக் தமக்குத் தெரியாது என்றும் அவர் வாதிட்டார். இருப்பினும், சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். தற்போது ஜாமீனில் வெளியே உள்ள அவருக்கு, வரும் நவம்பர் 20-ஆம் தேதி தண்டனை விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
