மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில், சீருடையில் சமூக ஊடக ரீல் வெளியிட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா படேல் மீது காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. ஜபல்பூர் நாகா காவல் சாவடியின் பொறுப்பாளராகப் பணிபுரியும் அவர், தனது சீருடையுடன் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில், “தன்னுடைய சொந்தப் பிரச்சினைகளுக்கே இன்னும் தீர்வு கிடைக்கவில்லை, ஆனால் அடுத்தவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வேலையைத் தேர்ந்தெடுத்துவிட்டோம்” என்ற எமோஷனல் வரிகளையும் குறிப்பிட்டிருந்தார். இந்த ரீல் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி, பெரும் விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளனர்.
காவல்துறையினரின் ஒழுக்கத்தையும், துறையின் நற்பெயரையும் பாதிக்கும் வகையில் சீருடையில் இதுபோன்ற வீடியோக்களைப் பகிரக் கூடாது என்று காவல்துறை தலைமையகம் ஏற்கனவே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமோ மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜித் பதாரியா கூறுகையில், முதற்கட்டமாக இது ஒழுங்கீனமான செயலாகக் கருதப்பட்டு, அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய சைபர் நிபுணர்களிடம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா படேலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும், விசாரணை அறிக்கை மற்றும் அவரின் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
