சமூக அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தனது வாழ்க்கை மற்றும் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவை பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் தைரியமாக எடுத்துள்ளார். சமீபத்தில் ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் கருமுட்டையை உறையவைத்துள்ளதாக அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். வயது கூடிக்கொண்டே போவதால் அவசரமாகத் திருமணம் செய்து, குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் பெண்களுக்கு இருக்கக் கூடாது என்று கூறியுள்ள அவர், அறிவியலின் உதவியோடு சரியான நேரத்தில் இந்த முடிவை எடுத்தது தனக்குப் பேரமைதியையும், மனநிம்மதியையும் தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையும் சினிமா பயணமும் சமமாகப் பயணிக்க வேண்டும் என்பதில் க்ரித்தி சனோன் உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், தனக்குக் குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால் அதற்காக அவசரப்பட்டுத் திருமண வாழ்க்கையில் நுழைய விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தனுஷுடன் நடித்த ‘தேரே இஷ்க் மே’ திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்த க்ரித்தி, தற்போது வயது குறித்த எந்த கவலையும் இல்லாமல் தனது முழு கவனத்தையும் சினிமா பயணத்தில் செலுத்தி வருகிறார். சமூகம் விதிக்கும் விதிகளுக்குப் பயப்படாமல், பெண்கள் தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் தங்களின் வாழ்க்கையைத் தேர்வு செய்வதே சிறந்தது என்ற க்ரித்தியின் இந்த முற்போக்கான கருத்து தற்போது இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
