அரசு பள்ளி மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி, அது பெரும் விவாதமாக மாறிய விவகாரத்தில் தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. மாணவியின் தன்னம்பிக்கையை அமைச்சர் குலைத்துவிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களை விட தகுதியும் அதிக ஊதியமும் பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களால் ஏன் மாணவர்களின் ஆங்கிலத் தரத்தை உயர்த்த முடியவில்லை என்ற நல்ல நோக்கத்திலேயே அமைச்சர் அவ்வாறு செயல்பட்டார் என தவெகவினர் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளனர். இதற்கிடையே, “தானும் ஒரு அரசு பள்ளி மாணவிதான் என்றும், அந்த வலியும் வேதனையும் தனக்குத் தெரியும் என்பதால் தான் கல்வித் தரத்தை மாற்றப் போராடுகிறேன்” என்றும் அமைச்சர் கீர்த்தனா தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தான் அளித்த பதவியைப் பகிர்ந்துள்ள அவர், “மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்களின் செயல்பாட்டில் லஞ்சம், ஊழல் துளியும் இல்லை என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பாராட்டத்தக்கது; அதே சமயம் அவரது அணுகுமுறையில் உள்ள சிக்கல்களை அவர் இணையதள விமர்சனங்களை கூர்மையாகக் கவனித்து, காலப்போக்கில் சரிசெய்து கொள்வார் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் நேர்மையைப் பாராட்டும் அதே வேளையில், மக்கள் மத்தியில் அவர் கையாளும் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற பக்குவமான ஆலோசனையை இந்த ட்வீட் மூலம் சீனு ராமசாமி முன்வைத்துள்ளார்.
