உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாராபுரா கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இன்று காலை ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. 49 வயதான புஷ்பா என்ற பெண், வழக்கம் போல் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக்குக் கோயிலின் மேல் பகுதியில் சென்றுகொண்டிருந்த உயரழுத்த மின்சார கம்பி (High Tension Line) காரணமாக அமைந்துள்ளது. சம்பவத்தின் போது பலத்த காற்று வீசியதால், கோயிலின் கோபுரத்தின் உச்சியில் இருந்த திரிசூலம் அசைந்து, மேலே சென்ற மின்சார கம்பியில் உரசியுள்ளது. இதனால் கோயில் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை அறியாத புஷ்பா, கோயிலின் மணியை அடிக்க முற்பட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மகள் கோயிலுக்குச் சென்று பார்த்தபோது தாய் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கோயில் மேல் மின்சார கம்பி செல்வது குறித்து ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார வாரியமே இந்த மரணத்திற்குப் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
