மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மொஹ்சினா கித்வாய் (94) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (ஏப்ரல் 08) அதிகாலை நொய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் காலமானார். நீண்ட காலமாக வயது முதிர்வு தொடர்பான உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவரது மறைவு, காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இந்திய அரசியலுக்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரின் அமைச்சரவைகளில் பணியாற்றிய பெருமைக்குரியவர் மொஹ்சினா கித்வாய். தொழிலாளர் துறை, சுகாதாரம், ஊரக வளர்ச்சி மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளில் அமைச்சராக இருந்து திறம்படச் செயல்பட்டவர். காங்கிரஸ் கட்சியில் பல உயர் பதவிகளை வகித்ததுடன், கட்சியின் வளர்ச்சிக்கும் நாட்டின் நிர்வாகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கது. இந்திய அரசியலில் ஒரு பெண் ஆளுமையாக அவர் பதித்த முத்திரை குறிப்பிடத்தக்கது.
