குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலலா நகரைச் சேர்ந்த 52 வயதான முன்னணி தொழிலதிபர் ஒருவர், தனது சொந்த மகள்கள் மற்றும் மருமகள்களைப் பாலியல் ரீதியாகச் சீரழித்த கொடூர குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மாந்தோட்டங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் குத்தகைக்கு எடுக்கும் தொழில் செய்து வரும் அந்த நபர், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனது 17 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகள்களையும், தனது மனைவியின் சகோதரி மகள்களான 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளையும் வீட்டிலும் பல்வேறு இடங்களிலும் கொடூரமாகத் துன்புறுத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகத் தன் கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த அவரது 50 வயது மனைவி, மறைமுகமாகக் கண்காணித்து உண்மைகளை நேரில் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
பெற்ற மகள்களிடமே தந்தை முறைகேடாக நடக்க மாட்டார் என்ற எண்ணத்தில் முதலில் கடந்து சென்ற அந்தத் தாய், விபரீதத்தை உணர்ந்தவுடன் சனிக்கிழமை தலலா காவல் நிலையத்தில் தனது கணவருக்கு எதிராகப் தைரியமாகப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மீது போக்சோ மற்றும் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இக்கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கைதான நபரின் அலைபேசி மற்றும் ஆடைகளைத் தடயவியல் சோதனைக்காகப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
