“11 மாத குழந்தையை இழந்து தவிப்பு…” தவறான சிகிச்சை தான் காரணம்…? கதறி அழுத பெற்றோர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

By Devi Ramu on ஆடி 13, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சுந்தரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கலைவேந்தன் – ஷாலினி தம்பதியரின் 11 மாதப் பெண் குழந்தையான ரித்திக்ஷாவிற்கு கடந்த இரண்டு நாட்களாகக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள், குழந்தையை முதலில் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் நிலைமை சீராகாததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் குழந்தையைக் கிருஷ்ணகிரிக்கு அவசரமாக அழைத்துச் சென்றபோது, கந்திலி அருகே வழியிலேயே குழந்தை திடீரென மயக்கமடைந்துள்ளது. இதனால் உடனடியாக அருகில் இருந்த கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரித்திக்ஷாவைக் கொண்டு சென்ற போதிலும், அங்குச் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையில் உரிய நேரத்தில் துரிதமாகச் சிகிச்சை அளிக்காததே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது; பின்னர் கந்திலி போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்