“மூன்று ஆண்டுகளில் காலி ஆகும் விஜய் ஆட்சி…” மோடி இருக்காரு…! 6 மணிக்கு மேல் முதல்வரை பார்க்கவே முடியாது… கடுமையாக விமர்சித்த அதிமுக மாஜி….!!

By Devi Ramu on ஆடி 13, 2026

Spread the love

மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சிக்கான ஆயுள் இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டுமே என்று கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவர உள்ள ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கொள்கைக்கான மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையில், 2029-க்குள் அது சட்டமாக்கப்படும் என்றும், அதன் மூலம் நடிகர் விஜய்யின் ஆட்சி முன்கூட்டியே முடிவுக்கு வரும் என்றும் அவர் கணித்துள்ளார். மேலும், அதிமுக மற்றும் திமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளின் வலிமையான உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு தவெகவிற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும், தற்போதைய அரசு மற்ற கட்சிகளில் உள்ள நிர்வாகிகளைத் தன்வசப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் காரியம் சாதித்துக் கொண்டு, தற்பொழுது தவெகவிற்குச் சென்று அமைச்சராகியுள்ள நிர்மல் குமார் போன்றவர்கள் அதிமுகவை விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் சாடியுள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறை இளைஞர்களை மூளைச்சலவை செய்தே விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் என்றும், மாலை 6 மணிக்கு மேல் அவரை ஆண்டவனாலும் வெளியே அழைத்து வர முடியாது என்றும் கிண்டலடித்துள்ளார். சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரு முதலமைச்சரால் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போவது வேதனையளிப்பதாகவும் உதயகுமார் தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார்.