திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு அவரது பெற்ற தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர், மது போதையில் தனது சொந்த மகளிடமே இந்த பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூற, அவர் உடனடியாக திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், தந்தை அண்ணாமலை மது போதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவர் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உடனடியாக அவரைக் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அண்ணாமலையை திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில், பெற்ற மகளுக்கே பாலியல் கொடுமை இழைத்த அண்ணாமலை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
