3 வருஷமா நடந்த பயங்கரம்!.. 11 வயது சிறுமிக்கு செல்போன், தின்பண்டங்கள் கொடுத்து பாலியல் சீண்டல்.. பெற்றோர் இல்லாத நேரத்தில் அத்துமீறிய 62 வயது முதியவர்..!!

By Muthu Mani on ஆனி 5, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கொத்தமங்கலத்தில், ஒரு குறிப்பிட்ட படைப்பு வீட்டில் திருமயத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை காவலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுடன் இவர்களின் 6-ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும் அங்கேயே தங்கியிருந்துள்ளது. பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியே செல்லும் சமயங்களைப் பயன்படுத்திக் கொண்ட அந்த படைப்பு வீட்டின் கணக்குப்பிள்ளை சுப்பிரமணியன் (62), சிறுமிக்குத் தனது செல்போனைக் கொடுத்து யூடியூப் பார்க்க வைத்தும், தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தும் ஆசை காட்டி, சுமார் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சுப்பிரமணியனின் கொடுமை தாங்க முடியாமல் சிறுமி இதுகுறித்துத் தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளின் எதிர்காலத்தைக் கருதி யாரிடமும் புகார் அளிக்காமல், வேலையை விட்டுவிட்டு உடனடியாகத் தங்கள் சொந்த ஊரான திருமயத்திற்குச் சென்றுவிட்டனர். இவர்கள் திடீரெனச் சென்றதால், இவர்களை வேலைக்குச் சேர்த்துவிட்ட முருகப்பன் என்பவர் தம்பதியினரைத் தொடர்புகொண்டு காரணம் கேட்டுள்ளார். அப்போதுதான், தங்கள் மகள் கணக்குப்பிள்ளை சுப்பிரமணியால் கடந்த 3 ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட விவரத்தைப் பெற்றோர் கண்ணீருடன் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

   

இதனைத் கேட்டு அதிர்ச்சியடைந்த முருகப்பன், பெற்றோருக்கு உரிய தைரியம் கூறி அவர்களை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வைத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் தீவிர விசாரணை நடத்தியபோது, முதியவர் சுப்பிரமணியன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பெற்ற மகளைப் போலப் பாதுகாக்க வேண்டிய சிறுமிக்குக் கொடுமை இழைத்த கணக்குப்பிள்ளை சுப்பிரமணியன் மீது போலீஸார் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.