தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் இந்த அறிவிப்பு, மே 1, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட கடன்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், இதனால் தமிழக அரசுக்கு ₹2,044.46 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் சாகுபடி பருவத்திற்குப் புதிய கடன்கள் பெற விரும்பும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு பெரிய உதவியாக இருக்கும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி, இக்கடன் தள்ளுபடியானது கடன்தொகையின் வரம்பிற்கு ஏற்ப அடுக்குமுறையில் (Slab system) வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுத் தள்ளுபடியும், சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ. 25,000 வரையிலும் தள்ளுபடி வழங்கப்படும். கடன் தொகை அதிகரிக்க அதிகரிக்க தள்ளுபடி செய்யப்படும் தொகை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, ரூ. 90,001 முதல் ஒரு லட்சம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 மற்றும் சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். மேலும், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கும் மற்றும் இதர பெரிய விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு, தற்போது விவசாயிகள் மத்தியில் கடுமையான ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தங்களது கண்டனக் குரலை எழுப்பியுள்ளது. விவசாயிகளின் சராசரி கடன் அளவு சுமார் ரூ. 3 லட்சம் வரை இருக்கும் சூழலில், வெறும் ரூ. 50,000 வரை மட்டுமே தள்ளுபடி வழங்குவது தங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அரசின் இந்த அடுக்குமுறை தள்ளுபடி அறிவிப்பு தங்களின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகக் கூட அமையாது என்பது விவசாயிகளின் முதன்மையான வாதமாக உள்ளது.
தேர்தல் காலகட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வரை உள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதி அளித்திருந்ததாக விவசாயிகள் நினைவூட்டுகின்றனர். “அன்று முழு கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு, இன்று ஆட்சிக்கு வந்த பிறகு குறிப்பிட்ட வரம்பிற்குள் மட்டும் சுருக்கி அறிவிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று விவசாய சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே, அரசு தங்களின் நிலையை மறுபரிசீலனை செய்து, தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விவசாயிகளின் முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனப் பாசன சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…