தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் நிலத்தகராறு காரணமாக விக்னேஷ் என்பவரை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில், அவருடன் பேசியதாக மேலும் 7 குடும்பங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் கே.வி.ராமராஜ் (85) என்பவரின் குடும்பமும் அடங்கும். இந்நிலையில், ராமராஜ் வயது முதிர்வால் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பொது தகன மேடையில் தகனம் செய்ய நாட்டாமைகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தினால் மட்டுமே உடலைத் தகனம் செய்ய அனுமதிப்போம் என்று கூறியதால், வேறு வழியின்றி அவரது குடும்பத்தினர் ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தி இறுதிச் சடங்கை நடத்தினர். மேலும், ஊர் பஞ்சாயத்தின் போது தகவல்கள் கசியாமல் இருக்கச் செல்போன்களைப் பறித்து வைத்துக்கொள்வதும், உளவுத்துறை போலீசாரைக்கூட வெளியேற்றி விடுவதும் இங்கு வாடிக்கையாக நடந்து வந்துள்ளது.
கடந்த 2025 பிப்ரவரி மாதத்திலேயே இந்த கட்டப்பஞ்சாயத்து குறித்துச் சர்ச்சை எழுந்தபோதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாகச் செயல்படும் நாட்டாமைகளுக்குக் கடிவாளம் போட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
