டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அமைந்துள்ள ஹல்தீராம்ஸ் உணவகத்தில், வழக்கத்திற்கு மாறாக அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகச் கூறி வாடிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சந்தோஷ் பாரத்வன்ஷி என்ற நபர், மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த ஹல்தீராம்ஸ் கிளையில் 2 மசாலா தோசை, 1 தேநீர் மற்றும் 1 மோர் ஆர்டர் செய்துள்ளார். இதற்கான மொத்தக் கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ 708 வசூலிக்கப்பட்டதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்தப் ரசீதின்படி, ஒரு மசாலா தோசையின் விலை ரூ 274, ஒரு கப் தேநீரின் விலை ரூ 74 மற்றும் மோரின் விலை ரூ 85 எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. இதனைத் தனது ‘X’ தளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மருத்துவமனைக்கு வந்தாலே சிகிச்சை, மருந்துகள் மற்றும் மருத்துவர் கட்டணங்களால் பணப்பைக் காலி ஆகிவிடும் சூழலில், உணவிற்கும் இவ்வளவு அதிக விலை நிர்ணயிப்பது மக்களைச் சுரண்டுவது போல உள்ளது” என ஆதங்கப்பட்டார். மேலும், வெளியிலிருக்கும் உணவகங்களில் வழங்கப்படும் காலை உணவுத் தள்ளுபடிகள் ஏதும் மருத்துவமனை வளாகக் கிளையில் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவரது பதிவு இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் அதிகப்படியான விலையைக் கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். “மருத்துவமனைகள் தற்போது வணிக வளாகங்களைப் போல மாறி லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றன” என்றும், நோயாளிகளின் உறவினர்களுக்கு வேறு வழியில்லாத சூழலைப் பயன்படுத்தி இத்தகைய அதிக விலை நிர்ணயிக்கப்படுவதாகவும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
