உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில், இளம் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகச் சிலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களைக் கேலி செய்து ஹராஸ் செய்த நபர்களைக் கண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும் உறவினர்களும், அவர்களைத் தாங்களாகவே மடக்கிப் பிடித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்த கிராம மக்கள், சட்டத்தைக் கையில் எடுத்து அவர்களுக்கு விசித்திரமான தண்டனை வழங்கினர். அவர்களின் முகத்தில் கரி பூசி அவமானப்படுத்தியதோடு, அப்பகுதியில் வளரும் ‘பிச்சூ பூட்டி’ என்ற தாவரத்தைக் கொண்டு அவர்களைத் தாக்கித் தண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த நபர்களைப் பொதுமக்களிடமிருந்து மீட்டுத் தங்களது காவலில் எடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் யாரும் சட்டத்தைக் கையில் எடுத்துத் தண்டனை வழங்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.
