மஹாராஷ்டிராவின் பிரபல தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் ஒரு தாய் புலி தன் மூன்று குட்டிகளுடன் கம்பீரமாகவும் அமைதியாகவும் சாலையைக் கடந்து செல்லும் நெகிழ்ச்சியான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘சோட்டி மது’ என்று அழைக்கப்படும் அந்தத் தாய் புலி, தனது சிறிய குட்டிகளைப் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு பாதையைக் கடக்கும் இந்த அபூர்வக் காட்சி வனவிலங்கு ஆர்வலர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
அங்குச் சுற்றுலா சென்ற அங்குக்ஷ் ஜிஜில்வார் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திரும்பும்போது இந்தச் சம்பவத்தை நேரலை போலக் கண்டு படம்பிடித்துள்ளார். அடர்ந்த புல்வெளியில் இருந்து முதலில் தாய் புலி வெளிப்பட, அதைத் தொடர்ந்து அதன் மூன்று குட்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்து சாலையைக் கடந்து சென்றுள்ளன. அச்சமயத்தில் எதிர்புறம் வந்த ஒரு இருசக்கர வாகன ஓட்டி புலியைக் கவனிக்காமல் வந்தபோது, காரில் இருந்தவர்கள் ஹெட்லைட்டை எரியவிட்டு எச்சரித்ததால் அவர் பாதுகாப்பான தூரத்தில் வண்டியை நிறுத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இயற்கையின் அழகையும் வனவிலங்குகளின் அமைதியான வாழ்வியலையும் பறைசாற்றும் இந்த வீடியோ, காடுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வனச் சாலைகளில் பயணிக்கும்போது மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பையும் மீண்டும் நினைவூட்டுகிறது.
