கல்லூரி முடிந்து வந்த மாணவி… கண்களில் மிளகாய் பொடி தூவி கழுத்தை அறுத்து கொடூர கொன்ற வாலிபர்… பட்டப் பகலில் பெங்களூரில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on ஐப்பசி 17, 2025

Spread the love

பெங்களூரு ஸ்ரீராமபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுதந்திர பாளையம் பகுதியில் வசித்து வரும் கோபால், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர். இவருக்கு யாமினி பிரியா (20) என்ற மகள் உள்ளார். இவர் பனசங்கரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி பார்ம் படித்து வரும் நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு புறப்பட்டு உள்ளார். கல்லூரியில் நடந்த தேர்வை எழுதிவிட்டு மதியம் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். இதனிடையே மதியம் 2 மணி அளவில் மந்திரி வணிக வளாகம் பின்னால் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே யாமினி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து தகராறு செய்துள்ளார். பிறகு தன்னிடம் இருந்த மிளகாய் பொடியை யாமினியின் கண்களில் வீசினார்.

இதனால் கண்களில் எரிச்சல் தாங்க முடியாமல் யாமினி துடிதுடித்த நிலையில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த யாமினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அந்த நபர் உடனே அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனைக் கண்டு அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் யாமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் யாமினியை சுதந்திர பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர்தான் கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது விக்னேஷ் யாமினியை காதலித்த நிலையில் அவருடைய காதலை யாமினி ஏற்க மறுத்துவிட்டார். இருந்தாலும் அவர் பின் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி விக்னேஷ் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு முன்பு ஒரு முறை யாமினியின் கழுத்தில் விக்னேஷ் வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் விக்னேஷ் கல்லூரி முடிந்து வந்த யாமினியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள விக்னேஷை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.