நெட்ஃபிலிக்ஸின் சமீபத்திய ரியாலிட்டி தொடரான ‘தேசி பிளிங்’, துபாயில் வாழும் உயர்மட்ட இந்தியப் பணக்காரர்களின் ஆடம்பர வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு வெளியாகி, தற்போது சமூக ஊடகங்களில் கடுமையான விவாதங்களையும் விமரிசனங்களையும் கிளப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தேஜஸ்வி பிரகாஷ், கரண் குந்த்ரா உள்ளிட்ட பலர் தோன்றினாலும், துபாயைச் சேர்ந்த கோடீஸ்வரத் தம்பதிகளான தபிந்தா சன்பால் மற்றும் சதீஷ் சன்பால் ஆகியோரின் திருமண உறவுதான் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சைக்கு முக்கியக் காரணம், நிகழ்ச்சியின் முதல் அத்தியாயத்தில் தபிந்தா (பிந்தா) தனது கணவருடனான காலை வழக்கத்தைப் பகிர்ந்துகொண்டதுதான். தன் கணவர் ஒரு இளவரசனைப் போல கண்விழிக்க வேண்டும் என்பதற்காகவும், கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்ற சதீஷின் நம்பிக்கையை ஒட்டியும், தான் தினமும் காலையில் அவரது பாதங்களை மசாஜ் செய்வதாகத் தபிந்தா குறிப்பிட்டுள்ளார். மேலும், கணவனின் நகங்களை வெட்டுவதை அன்பு மற்றும் மரியாதையின் அடையாளம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். 2026-ஆம் ஆண்டில் தம்பதிகளுக்கு இடையே இருக்கும் இந்த வழக்கம், ஆடம்பரம் மற்றும் பக்தி என்ற போர்வையில் காலாவதியான ஆணாதிக்கக் கொள்கைகளையும் பிற்போக்குத்தனத்தையும் ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் பலரையும் கொதித்தெழச் செய்துள்ளது.
மறுபுறம், சதீஷ் மற்ற பெண்களுடன் பார்ட்டிகளுக்குச் செல்வதையும், பெண்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதையும் தபிந்தா நியாயப்படுத்திப் பேசியது பார்வையாளர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தன் கணவர் ஒரே பெண்ணுடன் உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதவரை தனக்குப் பிரச்சினையில்லை என்று தபிந்தா கூறியுள்ளார். இத்தொடரில் தபிந்தாவிடம் 40 கிலோ தங்கம் இருப்பதும், ஒவ்வொரு ஆண்டும் தன்தேரஸ் பண்டிகைக்குச் சதீஷ் அவருக்கு 3 கிலோ தங்கம் பரிசளிப்பதும் காட்டப்பட்டதால், தபிந்தாவை இணையவாசிகள் “பண ஆசைக்காரி” என்று விமர்சிக்கத் தொடங்கினர். இருப்பினும், தன் மனைவி தன்னிடம் காட்டும் அக்கறையும் விசுவாசமும் பணத்திற்காக அல்ல, அது உண்மையான அன்பு என்று சதீஷ் தன் மனைவிக்கு ஆதரவாகத் திரையில் பேசியுள்ளார்.
