விசிகவின் ஊடகப்பிரிவு முதன்மை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து, அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். விசிகவில் இருந்து தான் முற்றிலுமாக விலகுவதாகத் தெரிவித்துள்ள அவர், கட்சியின் தலைமை மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, தொல். திருமாவளவன் அடிக்கடி தனது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றி வருவதாகவும், கட்சியின் கொள்கைகளிலும் கருத்தியலிலும் தடம் மாற அவர் தயாராகிவிட்டதாகவும் பனையூர் பாபு குற்றம்சாட்டியுள்ளார். விசிகவின் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒரு மூத்த நிர்வாகி, அக்கட்சியின் கொள்கை சார்ந்த தடம்மாற்றத்தை வெளிப்படையாக விமர்சித்து விலகியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
