திருவண்ணாமலை மாவட்டம் மலப்பாம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய விவகாரத்தில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் (கம்பன்) ஆகியோர் மீது 6 சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாயும் சூழலில், தற்போது எ.வ.வேலுவும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள மலைப்பாம்பாடி மற்றும் பள்ளிப்பட்டு கிராமங்களில் ‘ரிஷி எண்டர்பிரைசஸ்’ நிறுவனத்திடமிருந்து அருணாச்சலா சுகர் மில் நிலங்களை, எ.வ.வேலுவின் மகனும் அருணை புராடக்ட்ஸ் நிறுவன இயக்குனருமான குமரன் சுமார் ரூ.46 கோடி மதிப்பீட்டில் பொது ஏலம் மூலம் வாங்கியுள்ளார். கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுக இளைஞரணி மாநாட்டிற்காகத் தனது மகனின் இடத்தை சமன் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசு அனுமதியின்றி மலப்பாம்பாடி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக அணுகுசாலை அமைத்து மண் வெட்டி எடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் 2024-ம் ஆண்டு அரசிதழ் அறிவிக்கையின்படி, விவசாயப் பணிகளுக்காக வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்ட நீர்நிலைகளின் பட்டியலில் மலப்பாம்பாடி ஏரி இடம்பெறவில்லை. இருப்பினும், ‘கலைஞர் திடல்’ அமைப்பதற்காக ஏரியின் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு, சுமார் 45.72 லட்சம் கன அடி மண் சட்டவிரோதமாக அகற்றப்பட்டுள்ளது. இந்த மண் கொள்ளையின் மொத்த மதிப்பு சுமார் ₹8.22 கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு அரசுத்துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தற்போது முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் மீதான சட்ட நடவடிக்கை தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
