அடுத்த டுவிஸ்ட்…. இரவோடு இரவாக இறங்கி வந்த எடப்பாடி…. வேலுமணிக்கு வழங்கப்பட்ட அந்த முதன்மை பதவி…. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு…!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளையும் வீழ்த்தி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்தது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயன்றதாகக் கூறி, கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தவெக பக்கம் சாயத் தொடங்கிய நிலையில், அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் இடையே தீவிர பனிப்போர் வெடித்தது.

   

கோவை மாவட்டத்தில் வேலுமணியின் செல்வாக்கைக் குறைக்கும் வகையில், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டார். மேலும், வேலுமணியின் ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகளும் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, எடப்பாடியின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டன. இதனால் அதிருப்தியடைந்த வேலுமணி, கட்சியின் அதிகாரப்பூர்வக் கூட்டம் மற்றும் கொடி, படங்கள் ஏதுமின்றித் தனது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தினார். கட்சியின் முக்கியக் கூட்டங்களைப் புறக்கணித்து, கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை அவர் கையிலெடுத்தார்.

   

இந்தச் சூழலில், வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் போன்ற முக்கியத் தலைவர்களைச் சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி ஒரு புதிய அரசியல் காயை நகர்த்தியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்புகளில் வேலுமணிக்கு மீண்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவில் வேலுமணியின் பெயர் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

 

அதேபோல, சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபெறும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பெயர் பட்டியலின் உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. உட்கட்சிப் பூசலால் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை அரவணைத்துச் செல்லவும், அடுத்தடுத்து தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கவும் எடப்பாடி பழனிசாமி இந்தச் சமாதானத் தூதை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த அரசியல் நகர்வை வேலுமணியும் அவரது ஆதரவாளர்களும் ஏற்றுக்கொள்வார்களா அல்லது உட்கட்சி மோதல் மேலும் தீவிரமடையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.