தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது. இத்தேர்தலில் அதிமுக 47 இடங்களைக் கைப்பற்றி, ஒரு கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி அக்கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தவெகவில் இணையும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருவதால், ‘அதிமுக கரைந்து போகிறதா?’ என்ற மில்லியன் டாலர் கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டும் மவுனமும், நிதானமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கட்சித் தலைமை எவ்விதப் பெரிய தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் வெறும் ஆலோசனைக் கூட்டங்களை மட்டுமே நடத்துவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், இதன் பின்னணியில் இபிஎஸ்-இன் தெளிவான நீண்டகால ‘கேம் பிளான்’ இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இரட்டை இலை சின்னத்தின் மீதும், தற்போதைய கட்சி அமைப்பின் மீதும் உள்ள அதீத நம்பிக்கையே அவரது இந்த அமைதிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவினரைச் சமாதானப்படுத்தும் நோக்கில் எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ள ‘365 நாள் செக் பாயிண்ட்’ வியூகம் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதாவது, “தவெக என்பது புதிய கட்சி என்பதால், இன்னும் ஓராண்டு காலத்திற்குள் கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அவர்கள் நிச்சயம் தவறுகளைச் செய்வார்கள்; புதியவர்களுக்கு அங்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்காத நிலை வரும்போது, பிரிந்து சென்றவர்கள் தானாகவே மீண்டும் அதிமுகவிற்கே திரும்புவார்கள்” என்று இபிஎஸ் நம்புகிறார். தற்போதைய விஜய் அலை தற்காலிகமானது என்றும், அடுத்தடுத்த தேர்தல்களில் இதே நிலை நீடிக்காது என்றும் அவர் தன் கட்சியினருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்.
இருப்பினும், தற்கால டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா அரசியலில் அதிமுக கோட்டை விட்டுள்ளதை மறுப்பதற்கில்லை. இளைஞர்களைக் கவரும் ‘ஜென் ஸி’ பாலிடிக்ஸ் மற்றும் புதியவர்களுக்கான முக்கியத்துவத்தை திமுக போன்ற கட்சிகள் முன்னரே கையாண்டு வரும் நிலையில், அதிமுக இனிமேல்தான் விழித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. விஜய் வருகையால் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றத்தை உணர்ந்து, அதிமுக எப்போது தங்களை முழுமையாகப் புதுப்பித்துக் கொண்டு இளம்படையை களமிறக்குகிறதோ, அதில்தான் அக்கட்சியின் எதிர்கால வெற்றி அடங்கியிருக்கிறது.
