நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் கூட்டணியில் 25 எம்எல்ஏக்களும் என அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. இதில் வேலுமணி தரப்பு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிலைப்பாட்டை ஆதரிப்பதோடு, பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, ஊட்டி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், சிவி சண்முகத்தின் இந்த அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை மௌனம் காத்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில், கோவையில் பாஜாகவின் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் அக்கட்சியின் மையக் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிளவுகள் குறித்தும், பாஜாக யாருக்கு ஆதரவளிக்கும் என்பது குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாக, சட்டசபை தேர்தலில் அதிமுக சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற புகார் குறித்துக் கேட்கப்பட்ட போது, “தேர்தலில் அதிமுக ஒத்துழைக்கவில்லை என்ற தகவல் எதுவும் இல்லை; அதுபற்றி மையக்குழு கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை” என்று சிவி சண்முகம் வெளிப்படையாக அறிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பிய போது, அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேர்தலுக்குப் பிறகு அதிமுக உடனான உறவு அமைதியாக இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால், தற்போது அவர்களுக்குள் உட்கட்சிப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால், அதைப் பற்றி நாங்கள் எதுவும் கூற முடியாது” என்று மிகவும் கவனமாகப் பதிலளித்தார். இதன் மூலம் அதிமுகவின் உள்விவகாரங்களில் இப்போதைக்குத் தலையிடப் போவதில்லை என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
அதிமுகவின் இந்த உட்கட்சிப் மோதலைத் தீர்க்க பாஜக மேலிடம் தலையிட்டு உதவி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதுகுறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் நேரடிப் பதில் அளிக்காமல் நழுவிக் கொண்டார். சிவி சண்முகத்தின் அதிரடி அறிவிப்பால் பாஜக மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இதனால் பாஜக எடப்பாடி பழனிசாமியின் பக்கமே சாயும் என்றும் அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்பட்டது. ஆனால், “தேர்தலுக்குப் பின் உறவு அமைதியாக உள்ளது” என்று மட்டும் கூறி நயினார் நாகேந்திரன் கடந்து சென்றிருப்பது, அதிமுகவின் அதிகாரப் போட்டியில் பாஜக தற்போதைக்கு ‘காத்திருந்து கவனிக்கும்’ (Wait and Watch) தந்திரோபாயத்தையே கையில் எடுத்துள்ளதைக் காட்டுகிறது.
