சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினின் விமர்சனங்களுக்கு அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். “எப்போது பார்த்தாலும் பழனிசாமி தனது கால்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்” என முதல்வர் கிண்டல் செய்ததற்குப் பதிலளித்த ஈபிஎஸ், “கீழே கால்களைப் பார்த்து நடந்தால்தான் குழியில் விழாமல் சரியான பாதையில் செல்ல முடியும்; உங்களைப் போல வானத்தைப் பார்த்துக் கொண்டு நடந்தால் தடுக்கி விழ வேண்டியதுதான்” எனத் தற்காப்புடன் கூடியத் தாக்குதலைத் தொடுத்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் உடல்மொழி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “உங்களைப் போன்று நான் யாருடைய கையையும் பிடிக்கவில்லை; இது மரியாதை நிமித்தமானது. எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திரும்பக் கொடுப்போம், இல்லையென்றால் எங்களுக்கும் பதிலுக்குப் பேசத் தெரியும்” என எச்சரிக்கும் தொனியில் பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையேயான இந்த நேரடி வார்த்தைப்போர் தமிழக அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
