நேற்று இரவு 7:52 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், பெட்டமுகிலாளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவான இந்த நில அதிர்வினால் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டதுடன், லேசான சத்தமும் கேட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அச்சமடைந்த மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த திடீர் நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும், பயத்தையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், இந்த நில அதிர்வு பூமியின் உள்அமைப்பில் இயற்கையாக ஏற்படும் மிக சாதாரணமான ஒரு சிறிய அழுத்த வெளியீடு மட்டுமே என்று தெரிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
