அரியலூர் மாவட்டம் அங்கனூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த வேண்டும் என்ற சூது மற்றும் சூழ்ச்சி அரசியலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் இருதுருவ அரசியலை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவைத் தனிமைப்படுத்தவும், அதிமுகவை அழிக்கவும் பாஜக முயல்வதாகவும், இந்தச் சூழ்ச்சி அரசியலில் தவெகவும் இணைந்துள்ளதா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், அதிமுகவைக் குறிவைத்துதான் அண்ணாமலை காய் நகர்த்தியதாகவோ அல்லது அவ்வாறு அவர் நகர்த்தப்பட்டதாகவோ தெரிவித்தார்.
அண்மையில் நடந்த சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் அவர் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார். சேலம் அருகே உரிய அனுமதி பெற்றே அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதாகவும், ஆனால் அதனை மூடி ஒரு கலவர சூழலை ஏற்படுத்தியதில் காவல் துறைக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார். எனவே, இந்தச் சம்பவத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல், நாகர்கோவிலில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரமானது எனக் குறிப்பிட்ட அவர், காவல் நிலையங்கள் மற்றும் சிறைகளில் விசாரணைக்கைதிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல், நீதி மற்றும் சிறைத்துறைகளுக்கு உள்ளது என்பதால், இந்த மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலில் நிலவும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகள் குறித்தும் திருமாவளவன் கவலை தெரிவித்தார். தமிழகத்தில் எம்எல்ஏக்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும், இது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் அவர் எச்சரித்தார். தவெகவிலிருந்தே சிலரை விலை கொடுத்து வாங்க முயற்சிகள் நடப்பதாக அக்கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் புகார் அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோல தவெக மீது திமுக மற்றும் அதிமுக கட்சிகளும் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற போக்குகள் அனைத்தும் ஒட்டுமொத்த ஜனநாயகத்திற்கும் பெரும் தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
