மாத சம்பளம் போக தனியாக எக்ஸ்ட்ரா வருமானம் வந்தால் சேமிப்பதற்கு நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்கள் உண்டு. அப்படி மாத வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீசின் இந்த மாத வருமானத் திட்டம் ஒரு சிறப்பான தேர்வாக இருக்கும். இந்த திட்டத்தில் எப்படி சேர்வது வட்டி விகிதம் என்ன போன்ற விவரங்களை பற்றி இனி காண்போம்.
போஸ்ட் ஆபிசின் இந்த மாத வருமான திட்டமானது பாதுகாப்பான முதலீடாகவும் வருமானத்திற்கு உறுதி செய்யக்கூடியதாகவும் நல்ல ஒரு வட்டி விகிதத்திலும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும். இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டத்திற்கு வட்டி விகிதமாக 7.4 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் தனிக்கணக்கு மூலம் ஒன்பது லட்சம் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு மூலம் அதிகபட்சம் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இது அரசால் ஆதரிக்கப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாக இருப்பதால் உங்கள் பணத்திற்கு முழு உத்தரவாதம் இருக்கும்.
இந்த மாத வருமானத் திட்டத்தில் கூட்டுக்கணக்காக அதிகபட்சம் மூன்று பேர் சேர்ந்து தொடங்கலாம். சிறுவர் அல்லது மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு காவலர் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் தங்களது பெயரில் கணக்கு தொடங்கலாம். இந்த போஸ்ட் ஆபீஸில் மாத வருமானத் திட்டத்தை தொடங்க குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் 15 லட்சம் முதலீடு செய்யும்போது வருடாந்திர வட்டியில் ரூபாய் 1, 11,000 ஆக இருக்கும். இதனால் உங்களுக்கு மாத வருமானம் வட்டியாக ரூ 9250 கிடைக்கும். அதே ஒன்பது லட்சத்தை நீங்கள் முதலீடு செய்யும்போது வருடாந்திர வட்டி ரூபாய் 66, 600 ஆக இருக்கும். இதில் மாதாந்திர வட்டி உங்களுக்கு ரூபாய் 5550 கிடைக்கும். இந்த திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஐந்தாண்டுகள் முடிந்ததும் மீண்டும் நீடித்துக் கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பான திட்டமாக இருக்கும். மூத்த குடிமக்களாக இருப்பவர்கள் நிலையான வருமானத்திற்கு இந்த போஸ்ட் ஆபீஸின் மாத வருமான திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.