மாறன் குடும்பத்துல சம்பளம் வாங்கிய விஜய்… இப்போ இப்படி பேசலாமா?…. எ.வ.வேலுவின் சுளீர் கேள்வி… பரப்பரப்பான சட்டப்பேரவை….!

By Nanthini on புரட்டாதி 8, 2026

Spread the love

சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை பதிலுரையின் போது, முதலமைச்சர் விஜய் திமுக மீது சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகள் மற்றும் மிசா சட்டம் குறித்து ஆவேசமாகப் பேசினார். எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை எனக் கூறி நேற்றைய தினம் திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், இன்று நேரமில்லா நேரத்தின் போது முதலமைச்சரின் உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததால் பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

   

செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டமன்றத் துணைத் தலைவர் கே.என்.நேரு, “முதலமைச்சர் விஜய் பேசுவதற்குப் பொருளின்றி, பொய்யான செய்திகளைச் சினிமா பாணியில் ஒரு மணி நேரம் பேசி அசிங்கப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார்; மிசா பற்றிய தவறான தகவல்கள் அடங்கிய அவரது உரையை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், சட்டம் ஒழுங்கு தொடர்பான மானியக் கோரிக்கையில் தமிழ்நாட்டில் நடந்துள்ள கொலைகள் மற்றும் குற்றச் சம்பவங்களுக்குப் பதிலளிக்காமல், அரசியல் விமர்சனங்களை மட்டுமே முன்வைத்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

   

இதனைத் தொடர்ந்து பேசிய திமுக கொறடா எ.வ.வேலு, நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்துச் சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்ற விதி 92-ஐ முதலமைச்சர் மீறியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், “மிசா போராட்டத்தை விவரிக்கும் போது முதலமைச்சர் தனது உடல் மொழியால் தியாகிகளைக் கொச்சைப்படுத்தியுள்ளார். மாறன் குடும்பத்தினரைப் பற்றிப் பேசியவர், அதே குடும்பத்தினர் தயாரித்த திரைப்படங்களில் நடித்துக் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கியவர் என்பதையும், அவர்களே தனக்கு முதலாளியாக இருந்தார்கள் என்பதையும் மறந்துவிட்டு மாண்பைக் குலைக்கும் வகையில் பேசலாமா?” என்றும் கேள்வி எழுப்பினார்.

 

திராவிட மாடல் ஆட்சியில் உண்மையான ஆட்சி அமைந்திருந்த நிலையில், தற்போதைய அரசு ‘ரீல்ஸ் ஆட்சி’ நடத்திக் கொண்டிருப்பதாக எ.வ.வேலு சாடினார். நடுநிலையாகச் செயல்பட வேண்டிய சபாநாயகர் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பதாகக் குற்றம்சாட்டிய திமுகவினர், மிசா தொடர்பான விமர்சனங்கள், நிலுவை வழக்குகள் பற்றிய பேச்சு மற்றும் மாறன் குடும்பத்தினர் குறித்த உரை ஆகிய மூன்றையும் உடனடியாக அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தனர்.