ASTROLOGY
துன்பத்தை போக்கும் துர்க்கை அம்மன் வழிபாடு… இந்த நேரத்தில் இப்படி பூஜை செய்யுங்க…
துர்க்கை என்றால் தீமைகளையும் தீயவர்களையும் அழிப்பவள். தேவியின் பல அவதாரங்களில் உக்கிரமும் கருணையும் கொண்டதாக திகழ்வது துர்க்கை ரூபம் என்கிறது புராணம். சிவாலயங்களில் வைக்கப்பட்டிருக்கும் துர்க்கைக்கு சிவ துர்க்கை என்றும் பெருமாள் கோவிலில் உள்ள துர்க்கைக்கு விஷ்ணு துர்க்கை என்றும் பெயர் அமைத்து வழிபடப்படுகிறது.
நம் வாழ்வில் வரும் துன்பங்களையும் துக்கத்தையும் அழிப்பவள் துர்க்கை. கஷ்டத்தை தீர்க்கக் கூடிய இந்த துர்கா தேவியின் வழிபாட்டை சக்தி வழிபாடு என்றும் கூறுவர். ராகுவின் பிடியிலிருந்து தப்பிக்க துர்க்கை அம்மன் வழிபாடு மிகச்சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது.
ராகு கிரகத்தின் அதிதேவதை துர்க்கை ஆகும். அதனால்தான் ஒருவர் ராகுவின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டால் துர்க்கை அம்மனை ராகு காலத்தில் வழிபடுவது சிறப்பானது ஆகும். செவ்வாய் அன்றும் வெள்ளி அன்றும் துர்க்கை தேவியை வழிபட வேண்டும். அதுவும் ராகு காலத்தில் விளக்கேற்றி பெண்கள் துர்கா தேவியை வழிபட்டால் அது விசேஷ பலன்களை தரும்.
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்று விரும்புவார்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள ராகு கால வேளையில் துர்க்கை அம்மனை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். இந்த ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு.
கோவிலில் எலுமிச்சை தீபம் ஏற்றும்போது துர்க்கை அம்மனுக்கு மல்லிகைப்பூ அல்லது மஞ்சள் சாமந்திப்பூ மட்டுமே வாங்கி அம்மனுக்கு சாற்றி சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னர் மூன்று சுற்றுக்கள் வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அடுத்ததாக 20 நிமிடங்கள் அங்கு அமர்ந்து இருந்து துர்க்கை பாடல்களை சொல்லியவாறு இருக்க வேண்டும். 21 வது நிமிடம் கோயிலை விட்டு வெளியேறி விட வேண்டும். வீடு திரும்பியதும் வீட்டின் பூஜை அறையில் ஒரு நெய் தீபம் ஏற்றி ஐந்து ஊதுபத்தி ஏற்றி கற்பூர ஆராதனை செய்து வழிபட வேண்டும். தீபம் அணையும் வரை வெளியில் எங்கும் செல்லக்கூடாது. இப்படி ஒன்பது வாரங்கள் துர்க்கை வழிபாட்டை செய்து வந்தால் நம் துன்பங்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.