கேரள மாநிலம் திருச்சூர் அருகே போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்க, சமையலறை குக்கருக்குள் கஞ்சாவை மறைத்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பினீஷ் (40) என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு விரைந்த போலீசார், வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் போலீசாரால் எவ்வித போதைப்பொருளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது, சமையலறையில் அடுப்பில் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கர் திடீரென விசில் அடித்தது. அந்த விசிலுடன் சேர்ந்து சாதத்தின் வாசனைக்கு பதிலாக, கஞ்சா வாசனை வீடு முழுவதும் பலமாக வீசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். உடனே குக்கரைத் திறந்து சோதனையிட்டபோது, சாதத்திற்கு நடுவே 401 கிராம் எடையுள்ள கஞ்சா பாக்கெட் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாமர்த்தியமாக தப்பிக்க நினைத்து குக்கருக்குள் கஞ்சாவை பதுக்கிய பினீஷை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
