தமிழகப் பதிவுத்துறையில் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், எங்கிருந்தும் எப்போதும் இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் “வருகை இல்லா ஆவணப்பதிவு” (Faceless Registration) நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது. இப்புதிய தொழில்நுட்ப வசதியானது முதற்கட்டமாக முதல் விற்பனை மனை (First Sale Plot), புதிய அடுக்குமாடி குடியிருப்பு (Flat), வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், வங்கிக் கடன் அடமானம் மற்றும் கடன் ரசீது ஆவணங்கள் (Receipt Deed) போன்ற குறிப்பிட்ட வகை ஆவணப் பதிவுகளுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்பதும், அலைச்சல்களும் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும்.
இந்த இணையவழிப் பதிவை மேற்கொள்வதற்கு ஆவணங்களை எழுதுபவர், அதனைப் பெறுபவர் மற்றும் சாட்சிகளாகக் கையெழுத்திடுபவர் ஆகியோரின் முக்கிய அடையாளச் சரிபார்ப்புகள் அவசியமாக்கப்பட்டுள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்ப முறைகளான கைரேகை அல்லது கருவிழி (Iris) சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும். நவீன தொழில்நுட்பப் பாதுகாப்போடு வரவிருக்கும் இந்தத் திட்டம், பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேலும் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
